Wednesday 18 December 2019

பஞ்சலோக பட்டன் சட்டை

#பஞ்சலோகத்தில்_சட்டை_பட்டன்
#அம்மாபேட்டை_பொற்கொல்லர்!!
வீ கே.ரமேஷ்
க .தனசேகரன்
'ஆண்களும் ஆபரணங்கள் அணிந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்' என்ற நீண்ட காலச் சிந்தனையில் உருவானதுதான் இந்த ஐம்பொன் பட்டன் சட்டைகள்.

இந்தியாவிலேயே முதன் முறையாக ஐம்பொன்னால் ஆன பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளைச் சட்டைகள் சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது, ஆண்களின் ஆடை உலகத்தில் புதிய பரிமாணமாகப் பார்க்கப்படுகிறது. பட்டன் வைத்த சட்டைகள், திருமண வைபவங்கள் போன்ற சிறப்பு விழாக்களில் மட்டும் அணியக்கூடியவை அல்ல. வீட்டிலும் அலுவலகத்திலும் அணிவதற்கு ஏற்றவாறு பட்டன்களை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. விலையும் அதிகமில்லை என்பதால், அனைத்து தரப்பு மக்களாலும் வாங்கி அணிய முடியும்

இந்த ஐம்பொன் பட்டன் சட்டைகளை சேலம் அம்மாப்பேட்டை சித்தேஸ்வரா பகுதியில் உள்ள குலசேகர ஆழ்வார் தெருவைச் சேர்ந்த தினகரன் மற்றும் அவரின் மகன் வெங்கடேஷ்பாபு தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டைகள், பெரிய ஜவுளி நிறுவனங்களிலும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்த ஐம்பொன் சர்ட்டுகளின் உரிமையாளர் தினகரன், ''நாங்கள் கோயில்களில்
பொன் மற்றும் பஞ்சலோகத்திலான சிலைகள், கலசங்கள் செய்பவர்கள். பெண்கள் அதிக ஆபரணங்கள் அணிந்துகொள்வதற்கான வசதி இருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆண்களும் ஆபரணங்கள் அணிந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நீண்ட காலச் சிந்தனையில் உருவானதுதான் இந்த ஐம்பொன் பட்டன் சட்டைகள்.

இதற்காக, மூன்றாண்டுகள் பாடுபட்டோம். பட்டன் வடிவமைக்கும் மெஷின்களை உருவாக்குவதில் பெரும் சிரமங்கள் இருந்தன. பட்டன்கள் தயாரித்த பிறகும் அவை சட்டையிலிருந்து விழாமல் இருக்க வேண்டும், திரும்பாமல் இருக்க வேண்டும் ,அதேநேரத்தில், எளிமையாக மாற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதால், பல கட்ட முயற்சிக்குப் பிறகு இவற்றை உருவாக்கியிருக்கிறோம். இந்த பட்டன்களில் செம்பு, துத்தநாகம், வெள்ளீயம், வெள்ளி, தங்கம் என ஐம்பொன்கள் கலந்து, பிறகு 22 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

அதன்பிறகு, எங்களுக்குத் தெரிந்த நெசவாளர்கள் மூலம் நேர்த்தியாக ஆடைகளை நெய்து, எங்கள் தையல் கலைஞர்கள் மூலம் இந்த ஐம்பொன் பட்டன்களைப் பொருத்துவதற்கு ஏற்றவாறு இரண்டு பக்கமும் காஜா எடுத்து, 40, 42, 44 அளவுகளில் ரெடிமேட் வெள்ளைச் சட்டைகளாக உருவாகினோம். இந்தச் சட்டைகளை அணிந்து விசேஷங்களுக்குச் செல்லும்போது பார்க்க அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும்.

 ஐம்பொன் பட்டன்

இந்தச் சட்டைகளை வீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்திற்குச் செல்லும்போதும் சாதாரணமான சட்டையைப் போல அணிந்து செல்வதற்காக, பிளாஸ்டிக் பட்டன்களையும் இலவசமாகக் கொடுக்கிறோம். ஐம்பொன் பட்டன்களை எளிதாகக் கழற்றி விட்டு, பிளாஸ்டிக் பட்டன்களை மாற்றிக்கொள்ளலாம். அரைக்கை சட்டை 600 முதல் 1,200 விலைக்கும், முழுக்கை சட்டை 1,400 ரூபாய்க்கும் கொடுக்கிறோம். அரைக்கை சட்டையில் 7 பட்டன்களும், முழுக்கை சட்டையில் 9 பட்டன்களும் இருக்கும். இதுதவிர, தனியாகவும் பட்டன்கள் வழங்குகிறோம். ஐம்பொன் பட்டனில் அமெரிக்கன் டைமண்ட் கற்கள் பதித்த ஒரு பட்டனை 150 ரூபாய்க்கும், கட்டிங் ஐம்பொன் பட்டனை 75 ரூபாய்க்கும் கொடுக்கிறோம்'' என்றார்.

வசீகரிக்கும் வைர அணிகலன்கள்... ஆபரணங்கள் ஸ்பெஷல்
தினகரனின் மகன் வெங்கடேஷ்பாபு, ''தங்கம் மற்றும் பஞ்சலோகத்திலான ஆடைகளை நம் தமிழ்ச் சமூகத்தில் பாரம்பர்யமாகப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். கீழடி அகழ்வாராய்ச்சியில், தங்கத்திலான பட்டன்கள் கண்டெடுக்கப்பட்டதைக் காணலாம். கோயில்களில் பஞ்சலோகத்திலான சுவாமி சிலைகளை இந்தப் பஞ்சலோக பட்டன் சட்டைகள் அணிந்து வணங்குவதால், தெய்வீக ஆற்றல் பெருகுவதோடு நேர்மறை அதிர்வுகளை நாம் உணர முடியும்.

அப்பா, மகன், பேரன் எனப் பல தலைமுறைகள் தாண்டியும் உழைக்கும் சிறப்பு பெற்றவை இந்த பட்டன்கள். இவற்றை தங்கம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகத்தினாலும், அதில் பெயர், கடவுளின் உருவம், கம்பெனி லோகோ வைத்தும், வைரக் கற்கள், ராசிக் கற்கள் பொறித்தும் விலைக்குத் தகுந்தாற்போல பல டிசைன்களில் உருவாக்க முடியும். இந்த பஞ்சலோக பட்டன் சட்டைகள், ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள டெக்ஸ்வேலி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கிடைக்கும்'' என்றார்.