Saturday, 22 December 2018

மலையாள தேசத்தின் மஞ்சள் பித்தும் கேரள நகைஅடகுக்கடைகள் வளர்சியும்


மலையாள தேசத்தின் மஞ்சள் பித்து குறித்து அடிப்படையான சில விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
தங்கம்உலகின் மொத்த தங்க நுகர்வில் 50 சதவீதம் இந்தியாவிலும் சீனாவிலும் நடக்கிறது. இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு 2011-ம் ஆண்டில் சுமார் 986 டன்களாகவும், 2012-ம் ஆண்டு சுமார் 800 டன்களாகவும் இருந்தது. இந்தியாவின் மொத்த தங்க நுகர்வில் மூன்றில் ஒரு பங்கு கேரளாவில் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய திசைகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

ஏரென்ஸ் தங்கச் சந்தை (Aeren’s Gold Souk) எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கொச்சியில் கடந்த 2011 மார்ச்சில் பிரம்மாண்டமான வணிக வளாகம் ஒன்றைத் திறந்துள்ளது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியுள்ள இந்த வணிக வளாகம் தனிச்சிறப்பாக தங்க நகைக் கடைகளுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 6.5 லட்சம் சதுர அடிகளில் அமைந்துள்ள கடைகளில் பல்வேறு சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் செயல்பட்டு வருகின்றன. கடைகள் மட்டுமின்றி, நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

1947-க்குப் பின் மற்ற இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவாணியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.

வரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

டாலரும் நகையும்
வெளிநாட்டு பணமும் நகை வணிகமும்
ஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கியிருந்தது. இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை.

நகையும் அடகும், உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்த அளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட் மினி மற்றும் மணப்புரம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மற்றும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.

கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் நிறுவனத்திற்கு, இன்றைய தேதியில் நாடு முழுவதும் 25,000 ஊழியர்களும் 4,000 கிளைகளும் உள்ளன. 2009-ம் ஆண்டு வாக்கில் 985 கிளைகளாக இருந்து முன்றே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. முத்தூட்டின் கிளைகளில் சுமார் 85 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களில் அமைந்துள்ளன.

1992-ம் ஆண்டு பங்குகள் வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தங்க அடகு நிறுவனம் மணப்புரம். தற்போது 22 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து சுமார் 300 கிளைகளைக் கொண்டுள்ளது. 22,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

நம்ப முடியாத இந்த வளர்ச்சியின் ரகசியம் என்ன?

அந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ள கார்ப்பரேட் அடமானக் கடைகளாக வளர்ந்துள்ள தங்க அடகு நிறுவனங்களின் பொருளாதார இயக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக நகைக் கடன்கள் வாங்குவதாக இருந்தால் நம் மக்கள் உடனடியாக சென்று விழும் இடம் சேட்டுக் கடைகள் அல்லது பொதுத்துறை வங்கிகள். சேட்டுக் கடைகளில் நாம் கேட்கும் தொகை அப்படியே கிடைக்காது.

நகைக் கடன்
நகைக் கடன் நிறுவனம்
பொதுத்துறை வங்கிகளைப் பொருத்தமட்டில் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் முத்தூட் மணப்புரம் போன்ற நிறுவனங்களை விட மிகவும் குறைவு தான். பாரத ஸ்டேட் வங்கியில் நகைக் கடனுக்கு 14.45 சதவீத வட்டி. வேறு சில பொதுத்துறை வங்கிகளில் 12 சதவீதம் அளவுக்கும், கூட்டுறவு வங்கிகளில் 14.5 சதவீதத்திற்கும், விவசாய வங்கிகளில் 9 சதவீத அளவுக்கும் கூட நகைக்கடன் வசதி உள்ளது. ஆனால், பொதுத்துறை வங்கிகளில் நகை அடகு பிடிப்பதற்கு சிக்கலான பல நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்பதோடு பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பின்னும், நகையின் மதிப்பில் 60 -70 சதவீத அளவுக்கே கடன் கொடுப்பார்கள்.

லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் நமக்கு 90 ஆயிரம் கடன் தேவை என்றால், பொதுத்துறை வங்கிகளில் சுமார் 60 ஆயிரம் தான் கிடைக்கும். இந்த இடைவெளியில் தான் தனியார் அடகு நிறுவனங்கள் நுழைகிறார்கள். லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் 90 ஆயிரம் வரை கூட கடன் தரத் தயாராக உள்ளனர். திருட்டு நகையா இல்லையா என்பதை சோதிப்பதில்லை, அடையாளத்திற்கான ஆவணம் ஏதேனும் இருந்தால் போதும் வேறு சோதனைகள் கிடையாது. நகை அடகு அலுவலகத்தில் நுழைந்த பத்து நிமிடங்களுக்குள் கை மேல் காசு – ஆனால், வட்டி மட்டும் 25 சதவீதம்!

இது எப்படி சாத்தியமாகிறது? தொடந்து மக்களுக்குக் கடன் கொடுத்துக் கொண்டேயிருக்க இவர்களுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது. இந்நிறுவனங்கள் திறந்திருக்கும் கிளை அலுவலகங்களில் அடகு பிடிக்கப்படும் நகைகளைப் பாதுகாக்கும் பெட்டகங்களோ, வங்கியில் இருப்பது போன்ற போதுமான காவலர்களோ இல்லாமல் இருப்பதை கவனிக்க முடியும். எனில், அடகு பிடிக்கப்படும் நகைகள் எங்கே பாதுகாக்கப்படுகின்றன? இங்கே தான் சூட்சுமம் இருக்கிறது.

மக்களிடம் அடகு பிடிக்கும் நகைகளை இந்நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளில் மறு அடமானம் வைக்கின்றன. ஏமாளி மக்களிடம் நகை அடகு பிடிக்கும் நிறுவனங்கள், சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அந்த நகைகளைத் தங்களது சொத்துக்களாக (Assets) கணக்குக் காட்டிக் கொள்கின்றன. அடுத்து ஏதேனும் பொதுத்துறை வங்கியில் கார்ப்பரேட் தங்கக் கடன் என்கிற வகையில் மொத்தமாக நகைகளை அடகு வைத்து 8 சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்கின்றன. பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.

விளம்பரங்கள்
‘கனவு’களை விற்று கொள்ளை அடிக்கும் தங்க நகை அடகு வியாபாரம்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கும் என்கிற உத்திரவாதமற்ற நம்பிக்கை தான் இந்த மொத்த சூதாட்டத்திற்குமான அடிப்படை. தங்கத்தின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடையும் போது இந்த நகை அடகு நிறுவனங்கள் கட்டியெழுப்பியிருக்கும் சீட்டுக்கட்டு மாளிகையும் சடசடவென்று சரிந்து விழுந்தாக வேண்டும்.

தற்போது மழைக் காலத்துக் காளான்கள் போல் தங்க அடகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து வருவதை குறைந்தபட்சம் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன்படி, நகையின் மதிப்புக்கு 60 சதவீத அளவுக்கே கடன் கொடுக்க வேண்டும், மொத்த கடன் வணிகத்துக்கும் நிறுவனங்களின் மூலதன மதிப்புக்குமான இடைவெளி குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

எனினும், இந்நிறுவனங்களின் உயிராதாரமான நகை மறு அடகு விஷயத்தில் ரிசர்வ் வங்கி இன்னும் தலையிடவில்லை. மேலும், எந்தக் கட்டுப்பாடும் முறையான நெறிமுறைகளும் இன்றி கிளைகள் துவங்குவது, அதீதமான வட்டி விகிதங்கள் சுமத்துவது உள்ளிட்டவைகளிலும் ரிசர்வ் வங்கி பாராமுகம் காட்டி வருகிறது. தங்க விலை நிலவரம் நிலையற்றதாக மாறி வரும் நிலையில் இந்நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு விரிவுபடுத்த முற்பட்டுள்ளன. எனினும், இந்நிறுவனங்களின் அஸ்திவார கோட்பாடான ‘தங்க விலை எப்போதும் கூடிக் கொண்டேயிருக்கும்’ என்பதில் ஏற்பட்டிருக்கும் தள்ளாட்டம் விரைவில் இவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

இந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்களாக இருப்பதே. அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவும் அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவுமான தேவை அதிகம்.

தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனிநபர்களால் வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை முட்டாளின் தங்கம் (Fools Gold) என்கிறார்கள். இவ்வாறு வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை மூலதன முடக்கம் என்பதாகப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவிலோ சாமானிய மக்களால் ஆபத்துக் காலத்தில் உடனடிப் பயன்தரத்தக்க முதலீடாகவே தங்கம் கருதப்படுகிறது. இது போன்ற நகை அடகு கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஏழை எளிய உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களை எந்தக் கூச்சமும் இன்றி வக்கிரமான முறையில் காசாக்குகின்றன.

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முழு அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டுள்ள அரசோ கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்தி வருகிறது. காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, தொழிலாளரின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன எந்தக் பாதுகாப்புமற்று தொழிலாளர்கள் வேலைகளில் இருந்து விசிறியடிக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும், நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும், நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், திடீர் வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் மக்களுக்கு அதீதமான நிதித் தேவைகளை ஏற்படுத்துகின்றன.

சம்பள வெட்டும் வேலையிழப்பும் தொழிலாளர் வர்க்கத்தின் கழுத்தை நெருக்கிச் சுருக்குகிறது. மக்கள் இந்த அடிமை அரசாங்கத்தால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர். நட்டாற்றில் விடப்பட்ட மக்களின் இந்த நெருக்கடி முத்தூட், மணப்புரம் போன்ற நவீன கார்ப்பரேட் ஈட்டிக்காரர்கள், ஈமு கோழி வளர்ப்பு, பிளேடு சீட்டுக் கம்பெனிகள் போன்றவற்றைத் தோற்றுவித்த வண்ணம் உள்ளது. இந்த சமூகச் சூழலைப் புரிந்து கொண்டு மாற்றியமைக்கப் போராடுவதன் ஊடாகத் தான் இது போன்ற திருட்டு கும்பல்களிடமிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment